Thursday, March 14, 2013

இலங்கையில் மெதடிஸ்த திருச்சபை - 2

ஜோன் வெஸ்லி ஒரு கலகக்காரனாக இருக்கவில்லை. மாறாக ஒரு சீர் திருத்தவாதியாக இருந்தார். அவர் ஸ்தாபனங்களை இல்லாதொழிக்க நினைக்கவில்லை மாறாக அவற்றை காப்பாற்ற வழி தேடினார். இங்கிலாந்து சபையை அவர் ஏற்றுக்கொண்டார். அமெரிக்க புரட்சியை எதிர்த்தார்.

ஆரம்பத்தில் மெதடிஸம் என்பது இங்கிலாந்து சபையினுள் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு குழு இளைஞர்களால் உருவாக்கப்பட்ட வாழ்க்கை முறையாக இருந்தது. இவர்களுடைய வாழ்க்கையின் நோக்கம் அர்த்தம் என்பன கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவுமுறை என்பது ஆவிக்குரிய பிரகாரமானது என்று நம்பினார்கள். 

வெஸ்லி குதிரையிலேறி இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் போன்ற இடங்களுக்குச் சென்று அங்கு சிறு சமூகங்களை ஏற்படுத்தி நிலக்கரி அகழ்பவர்கள், தொழிற்சாலை தொழிலாளிகள், விவசாயிகள், வேறு நிறத்தவர்கள் எல்லோருக்கும் பிரசங்கித்தார். ஒவ்வொரு வருடமும் 5000 மைல்கள் படி, 50 வருடங்களுக்கு மேல் பயணித்த ஒரு மாபெரும் மனிதர் தான் இந்த ஜோன் வெஸ்லி. பனி புயல்களோ, கோடைகால வெயில்களோ, கலகக்காரரோ அவரை தடை செய்ய முடியவில்லை. 


வெஸ்லி ஒரு சிறந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வர்ணனையாளரும் ஆவார். அவர் தாம் பாதுகாப்பாக வைத்திருந்த ஒரு குறிப்பு புத்தகத்தில் அவர் நற்செய்தி கொண்டு போகையில் 60 கலகக்காரரை சந்தித்தமை குறித்து வர்ணித்து இருக்கிறார். வெஸ்லி பணிநீக்கம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு சபிக்கப்பட்டாலும் கலகக்காரருக்கு தைரியமாக முகங்கொடுத்தார். அவர் ஏழைகளுக்காகவும், உரிமை மறுக்கப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுத்து அவர்களோடு வாழ்ந்து, உணவருந்தி அவர்களின் உற்ற நண்பராக இருந்தார். மக்கள் ஜோன் வெஸ்லியை கடவுளின் தொண்டர் என்றும் அவர் ஒரு பெரிய இலக்கை கொண்டுள்ளார் என்றும் அறிக்கையிட்டனர். 

ஜோன் வெஸ்லி பாமர மக்களுக்கு கல்வியறிவு ஊட்டினார், அவர்களின் காலடியில் அமர்ந்திருந்து அவர்களை ஊக்கப்படுத்தினார். ஏழைகள் அவரை மிகவும் நேசித்தனர். அவரது வாழ்க்கை முறை அவரது உண்மைத்துவத்தை உழைக்கும் சமூகத்திற்கு எடுத்துக் காட்டியது. அவர் தேவாலயங்கள், வீடுகள், வீதிகள், சந்தைகள், வயல்கள் எங்கும் பிரசங்கித்தார். அவரது செய்தியை கேட்க ஜனங்கள் ஆயிரமாயிரமாக திரண்டு வந்தனர். அநேகர் தொடப்பட்டு தமது வாழ்வில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். 


ஜோன் வெஸ்லி தனது 81 ஆவது வயதிலும் பட்டினியால் வாடுவோருக்காக வீடு வீடாக சென்று நிதி சேகரித்தார். இந்த நிதியை ஏழைகளுக்கான உணவு, உடைகளுக்கு பயன்படுத்தினார். ஒரு அறிஞர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். " சபையானது செத்ததாயிருந்தது , வெஸ்லி அதை எழுப்பினார். ஏழைகள் புறக்கணிக்கப்பட்டனர், ஆனால் வெஸ்லி அவர்களை தேடிச் சென்றார். நற்செய்தி முடக்கப்பட்டிருந்தது, வெஸ்லி தனது பேச்சினால் அதனை எங்கும் காற்றில் தொனிக்கச் செய்தார்".

இலங்கையில் மெதடிஸ்த திருச்சபை - 1

இலங்கையில் மெதடிஸ்த திருச்சபையானது பிரித்தானியர் ஆட்சி காலத்தில் அதாவது 1814 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி அன்று ஆழமான தைரியமான அர்ப்பணிப்புடனும், இலங்கை மண்ணில் இயேசுவின் அன்பை எடுத்து சொல்லவும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு கடவுளின் கிருபை மிஷனரிகள் மேல் பெரிதாக இருந்த படியால் அவர்களால் இது இயலுமான காரியமாய் ஆயிற்று.

ஜோன் வெஸ்லியின் வரலாறு 

ஜான் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையின் நிறுவனர் ஆவார். இவர் இங்கிலாந்தில் உள்ள எப்வோர்த் எனும் சிறு கிராமத்தில் ஜூன் 1703 இல் பிறந்தார்.இவர் தனது 23 ஆவது வயதில் மதகுருவாக தன்னை அர்ப்பணித்தார். அதோடு தத்துவத்திலும் மாஸ்டர் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். இவரை பற்றி சொல்லபோனால் இவர் ஒரு பலவீனமான மனிதன்.


அந்த காலத்தில் இங்கிலாந்து தேசம் பல புரட்சிகளுக்கும், மாற்றங்களுக்கும் உள்ளாகி கொண்டு இருந்தது. லண்டன் நகரமானது ஒரு நெரிசலான வறுமை, சூது, மது போன்றவற்றால் நிறைந்த ஒரு இடமாக காணப்பட்டது. இளைஞர்கள் வீதிகளில் இறங்கி வன்முறையில் ஈடுபட்ட காலமது. மக்கள் தங்களது தார்மீக கொள்கைகளை இழந்தவர்களாய் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்தனர். சிறைச்சாலை கைதிகளால் நிறைந்திருந்தது, வைத்தியசாலை நோயாளிகளை குணப்படுத்த முடியாமல் திணறியது. இந்த மன அழுத்தத்துடன் இருந்த சமுகத்திற்கு ஜான் வெஸ்லி இன் நல்ல செய்திகள் ஒரு இரட்சிப்பை கொண்டு வர ஏதுவாக இருந்தது.